Marriage fixed in Heaven


திருமணத்திற்கு பிறகு மணமகனும், மணமகளும்

திருமணத்திற்கு பிறகு மணமகனும், மணமகளும் (அகநானுாற்று முதல்இரவு)

திருமணம் முடிந்த பின் புதுமண மக்கள் தனித்து விடப்படுகின்றனர். தலைவி நாண மிகுதியில் முகம் புதைந்து நிற்கின்றாள். தலைவன் விருப்பமுடன் அவள் முகத்தை மூடிய கைகளை விலக்கிவிடத் தொடுகின்றான். தலைவனின் முதல் தொடல்! தலைவியின் நாணம் அச்சமாக மாறிப் பெருமூச்சு மிகுகின்றது.

தலைவியின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றான் தலைவன். தலைவியின் அச்சம்போக்க, “நின் மனதில் நினைப்பதை அஞ்சாமல் கூறு“ எனப் பேசத் துாண்டுகின்றான். தலைவனின் மென்மையான சிரிப்பும், அருகில் அமர வைத்ததும், பேசத் துாண்டியதுமான மென்மையான அணுகுமுறைகளால் தலைவி அச்சம் நீக்குகின்றாள். மனம் நிறைந்த மகிழ்ச்சி தலைவியின் முகத்தில் புலப்படுகின்றது. இவ்வழகிய ஓவியத்தை,

“முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழ!நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரைஎன,
இன்நகை இருக்கை பின்யான் வினவலின்
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகி“

என்னும் பகுதி சித்திரம் தீட்டுகின்றது.

(Collected from Books)

Tweet